சர்வதேச சக்கர நாற்காலி வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரம் மாற்று திறனாளி வீரர் தேர்வு

காஞ்சிபுரம், ஆக.20: சர்வதேச போட்டியில் கலந்துகொள்ளும் மாற்றுத் திறனாளி, சக்கர நாற்காலி வாள்வீச்சு வீரர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் ஜோசப் சுரேஷ். மாற்றுத்திறனாளி. சர்வதேச அளவில் சக்கர நாற்காலி வாள்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மன் நாட்டில் நடக்கும் சக்கர நாற்காலி வாள்வீச்சு போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி உள்ளார். இதற்கான தகுதி சுற்றுப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த 2 பேர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜோசப்சுரேஷ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இதைதொடர்ந்து, சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக கலெக்டர் பொன்னையாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஜோசப்சுரேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நானும், என் மனைவியும் மாற்றுத் திறனாளிகள். கடந்த 2007ம் ஆண்டு சீன நாட்டின் தைபை தவானில் நடந்த உலக அளவிலான வீல்சேர் வாள்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு முதல் வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தேன். 2010ம் ஆண்டு சீன நாட்டின் காஞ்சுனில் ஆசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். 2012ம் ஆண்டு கனடா நாட்டின் மாண்டிரியலில் நடந்த சர்வதேச வீல்சேர் வாள்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றேன்.

ஜெர்மனியில் 2013ம் ஆண்டு,  2014ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த போட்டியிலும் கலந்துகொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளேன். தற்போது சென்னையில் நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் 26 மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் ஷேர்ரே, சாயில் போட்டிகளில் சாயில் போட்டியில் தங்கப் பதக்கமும், ஷேர்ரே போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளேன். எனவே சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கலெக்டர் பொன்னையைவை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்றார்.

Related Stories: