விபத்தில் வாலிபர் பலி சவ ஊர்வலத்தில் கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சில் ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது

விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் அஜிஸ் மகன் சதாம் (24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட விருத்தாசலத்துக்கு நண்பருடன் பைக்கில் வந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் விருத்தாசலம் திருவிக நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கி பாலக்கரை அருகே உள்ள இடத்தில் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. அப்போது சதாமின் உறவினர்கள், நண்பர்கள் 100க்கும் மேற்பட்டோர் நடனம் ஆடியபடி சென்ற போது அண்ணா நகர், திருவிக நகர், காட்டுக்கூடலூர் ரோடு, கடலூர் ரோடு வழியாக சென்ற போது அப்பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு கடைக்காரர்களை அச்சுறுத்தி உள்ளனர்.மேலும் வாகனங்களில் வந்தவர்களையும், நடந்து சென்ற பொதுமக்களையும் கற்கள் வீசி காயப்படுத்தினர். கல்வீச்சில் அண்ணாநகர் பகுதியில் உள்ள சலூன் கடை கண்ணாடி உடைந்து கடை உரிமையாளர் கோவிந்தசாமி (54), சிகை அலங்காரம் செய்ய வந்த கண்டியங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடி மற்றும் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு 200க்கும் மேற்பட்ட கடைகளை மூடச்சொல்லி கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். இதனால் பதற்றமடைந்த கடை வியாபாரிகள் அனைவரும் கடைகளை சிறிது நேரம் மூடிவிட்டு சவ ஊர்வலம் சென்ற பிறகு திறந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை பிடிக்க சதாமின் உடல் அடக்கம் செய்யும் இடத்துக்கு சென்று புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரை சேர்ந்த கந்தவேல் மகன் சரவணன் (26), சக்தி நகரை சேர்ந்த சிட்டிபாபு மகன் காட்சன் (20), வீரபாண்டியன் தெருவை சேர்ந்த ரவி மகன் முகிலன் (20), ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (28), பங்களா தெருவை சேர்ந்த அமருதீன் மகன் முகமது சித்திக் அலி (23) ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவிக நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன் மற்றும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: