நாளை சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர், ஆக. 14: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கடல் மார்க்கமாகவும், தரைவழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைதொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் பணி அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பஸ் நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் முதுநகர் ரயில் நிலைய பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். கடலூர் மார்க்கமாக பயணிக்கும் அனைத்து ரயில்களையும் முதுநகர் ரயில் நிலையம் மற்றும்  திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் ராஜ், தனிப்பிரிவு பாஸ்கரன் மற்றும் போலீஸ் குழுவினர் பயணிகளிடம் பொருட்களை சோதனை செய்தனர். தொடர்ந்து சுதந்திர தின விழா முடியும் வரை சோதனை தொடரும் என ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளின் பொருட்கள், உடமைகள் உள்ளிட்டவை வெடிகுண்டு சோதனை செய்யும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் தண்டவாள பகுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகிக்கும்படி நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசார் தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடலோர காவல் படையினர், கடலோர கிராமங்களில் வெளி நபர்கள் நடமாட்டம் மற்றும் படகுகள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக தெரிவிக்க மீனவர்களை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கை உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழா நடைபெறக்கூடிய கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் தொடர்ந்து அங்குலம், அங்குலமாக அண்ணா விளையாட்டு அரங்கில் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: