வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள்

ஊட்டி, ஆக. 11:  ஊட்டி  அருகேயுள்ள அவலாஞ்சி மற்றும் காட்டு குப்பை பகுதிகளில் உள்ள மின் வாரிய  குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு  தொடர்ந்து உணவு ஹெலிகாப்டர் மூலம்  வழங்கப்பட்டு வருகிறது.  ஊட்டி அருகேயுள்ள அவலாஞ்சி பகுதியில் கடந்த 3ம்  தேதி துவங்கிய மழை படிப்படியாக அதகிரித்து 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  கொட்டித் தீர்த்தது. இந்த மூன்று நாட்களில் மட்டும் அவலாஞ்சி பகுதியில்  2136 மி.மி., மழை பெய்துள்ளது. 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை பெய்த கன  மழையால், அவலாஞ்சி மற்றும் காட்டு குப்பை மின் நிலையம் செல்லும் சாலைகள்  துண்டிக்கப்பட்டன.  மலைப்பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட காற்றாற்று  வெள்ளத்தில் கல், மண் மற்றும் மரங்கள் சாலையில் குவியல் குவியலாக  காணப்படுகிறது. ேமலும், பல இடங்களில் சாலை சேதம் அடைந்துள்ளது. சாலையில்  மழை நீர் காற்றாறு போல் ஓடுகிறது. இதனால், இவ்விரு மின் வாரிய முகாம்களும்  மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டன.  கடந்த நான்கு நாட்களாக  மற்றப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், காட்டு குப்பை  பகுதியில் சிக்கியிருந்த நான்கு பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு காரமடையில் உள்ள  அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.தொடர்ந்து, காட்டு குப்பை  மற்றும் அவலாஞ்சி பகுதியில் உள்ள மின் வாரிய குடியிருப்புவாசிகளுக்கு  ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு  வருகிறது. நேற்று முன்தினம் மாலை துவங்கிய இப்பணிகள் நேற்றும் நீடித்தது.   நேற்று சூலூர் விமான நிலையத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர் மூலம்  அவலாஞ்சி பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories: