பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதில் முறைகேடு

ஈரோடு, ஜூலை 24:  ஈரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு நகர கமிட்டி சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகரில் தற்போதுள்ள வீடுகளை பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இணைப்பு வழங்கும் போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால், இதுவரை இத்திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை மாநகராட்சி நிர்வாகம் கடைபிடிக்காத காரணத்தால் வீட்டு உரிமையாளர்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி பாதாள சாக்கடை விதிகளின் படி ஒவ்வொரு வீட்டிலும் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது மாநகராட்சி பொறியாளர்கள் அந்த வீட்டின் பணி குறித்து திட்ட மதிப்பீடு மேற்கொண்டு வரையறுக்க வேண்டும். ஆனால், இதுவரை இணைப்பு மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான வீடுகளில் இந்த திட்ட மதிப்பீடு பணிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, ஒப்பந்ததாரர்கள் தங்கள் விருப்பம் போல திட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு இப்பணியினை நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும், குழாய் பதிக்க வருவோர் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு அடிக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை பறிக்கின்றனர். இதுபற்றி, புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி சார்பில், தெளிவான அறிவிப்பு வெளியிடாமல், ஒப்பந்ததாரர்களுக்கு துணை போவதாக உள்ளது.  இதுதவிர வீட்டின் பிற பயன்பாட்டு பகுதிக்கு தனி குழாய், கழிப்பறை, குளியலறை போன்றவற்றுக்கு தனி குழாயில் இணைத்து, அதை பாதாள சாக்கடை இணைப்பு குழாயுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஒரே குழாயில் இணைக்கின்றனர். பணம் தர மறுக்கும் வீடுகளுக்கு இணைப்பு வழங்க முடியாது எனக்கூறுகின்றனர்.  விதிமுறை மீறி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இதில் பல்வேறு முறைகேடு நடந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: