சர்வர் பிரச்னை சரி செய்யக்கோரி கருவூலத்தில் அரசு ஊழியர்கள் கோஷம்

ஈரோடு, ஜூலை 24:  சர்வர் பிரச்னையை சரி செய்யக்கோரி அரசு ஊழியர்கள் கருவூலக அலுவலகத்தில் நேற்று கோஷமிட்டு முறையிட்டனர். தமிழகத்தில் கருவூலகத்துறை கணினி மயமாக்கப்பட்டதையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் விபரம் அனைத்தும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் ஊதிய விபரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே கருவூலகத்துறையில் இருந்து ஊதியம் விடுவிக்கப்படுகிறது.  ஆனால், சர்வர் பிரச்னை காரணமாக, பதிவேற்றம் செய்வதில் சிக்கல் நிலவி வருவதால் கடந்த சில மாதமாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சர்வர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலக அலுவலகத்தில் கூட்டமாக சென்று முறையிட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு தலைமை தாங்கினார். முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி கருவூலக அலுவலகம் முன்பாக கோஷம் எழுப்பிய ஊழியர்கள், பின்னர் உள்ளே சென்று கருவூலக அதிகாரிகளிடம் சர்வர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண கோரி முறையிட்டனர்.

Related Stories: