‘ஆண்ட்ராய்டு காலத்திலும்’ கழிவுநீரை கையில் அள்ளி அகற்றும் அவலம்

வேடசந்தூர், ஜூலை 24: வடமதுரையில் கழிவுநீரை அகற்றும் பணி எந்த பாதுகாப்பு உபகரணமின்றி நடப்பதாக புகார் எழுந்தது.

வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்வில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. அண்ணாநகர் கூட்டுறவு சொசைட்டிக்கு அருகில் பள்ளம் ஏற்படுத்தி அதில் கழிவுநீர் தேங்கும் வகையில் அமைத்து உள்ளனர். இப்பள்ளத்தில் கழிவுநீர் நிறைந்தவுடன் வாளியில் எடுத்து வெளியில் ஊற்றும் வேலையை நாள்தோறும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் முன் மண் சாலையாக இருந்த போது கழிவுநீர் பூமிக்குள் சென்று விடும். தற்போது சிமெண்ட் சாலை அமைத்தவுடன் அனைத்து பகுதியில் இருந்தும் கழிவுநீர் முழுமையாக இப்பள்ளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் காலை, மாலை என இருநேரமும் கழிவுநீரை வெளியில் எடுத்து ஊற்றும் நிலை உள்ளது. இப்பணியை செய்யும் பெரியவருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கவில்லை.

வெறும் கையில்தான் கழிவுநீரை அள்ளி ஊற்றுகிறார். மேலும் கழிவுநீர் தேக்கத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்த பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் 4வது வார்டில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவும், அதுவரை கழிவுநீரை அள்ளி வெளியில் ஊற்றுபவருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: