காரைக்கால்-பேரளம் வரை அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காரைக்கால், ஜூலை 24: காரைக்கால் முதல் பேரளம் வரையிலான அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க, புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, முன்னாள் திட்டத்துறை இணை இயக்குனர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து, காரைக்கால் மாவட்ட முன்னாள் திட்டத்துறை இணை இயக்குனர் மோகன் கூறியது: காரைக்கால் முதல் பேரளம் வரையில் 23 கி.மீ அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற ரயில்வேத் துறையிடம் ஏற்கெனவே உள்ள இடம் தயாராக உள்ளது. இந்த தூரத்தில் 4 தனித்தனி ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் வகையில் ரூ.116 கோடிக்கு ஒப்பந்த புள்ளிகள் ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் கோரப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. காரைக்கால் திருநள்ளாற்றில், இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை திருநள்ளாறு சனிபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இத்திட்டத்தை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.குறிப்பாக காரைக்கால்-திருநள்ளாறு வரையிலான திட்டத்தையாவது காலத்தோடு முடிக்கவேண்டும். அப்போதுதான் நாடெங்கிலிருந்தும் திருநள்ளாறுக்கு ரயில்கள் இயக்க முடியும். இத்திட்டத்துக்கும் சேர்த்து ஒதுக்கீடு செய்த ரூ.40 கோடி நிதி போதுமானதல்ல. எனவே, பிற அகல ரயில்பாதைத் திட்டங்களில் சேமிப்பாகும் நிதியை மடைமாற்றம் செய்து காரைக்கால்&பேரளம் ரயில் திட்டத்துக்கு தந்து, இந்த திட்டத்துக்கான உடனடி நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடியாக உயர்த்தவேண்டும்.மேலும், காரைக்காலை ஒட்டிய நாகை மாவட்டமான தரங்கம்பாடியுடன் இத்திட்டத்தை இணைப்பு செய்யப்படுவதன் மூலம் திருநள்ளாறு சந்திப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. எனவே, தற்போது திருநள்ளாறில் திட்டமிடப்பட்டுள்ள 3 நடைமேடையை 5ஆக உயர்த்த வேண்டும். காரைக்கால்-பேரளம் இணைப்பு செய்யப்பட்டால், காரைக்காலில் இருந்து சென்னைக்கு செல்லும் பயண தூரம் இரண்டரை மணி நேரம் குறையும். திருச்சி ரயில் கோட்டத்தில் முந்தைய ஆண்டை காட்டிலும் பயணிகள் வருவாய் 10.16 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, சரக்குப் போக்குவரத்து மூலம் 37.5 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. இதற்கு காரைக்கால் துறைமுகத்தின் மூலம் நிலக்கரி ஏற்றுமதியே முக்கியக் காரணம். எனவே, காரைக்கால் திட்டத்தின் மீது ரயில்வே நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு புதுச்சேரி ஆட்சியாளர்களும், புதுச்சேரி தொகுதியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார்.

Related Stories: