மின்துறையின் மெத்தனத்தால் காரைக்கால் ஜூபைதா நகரில் 29 ஆண்டாக தெருவிளக்கில்லை

காரைக்கால், ஜூலை 24: மின்துறையின் மெத்தனத்தால் காரைக்கால் நகர பகுதியின் மையப்பகுதியில் உள்ள ஜூபைதா நகர் கடந்த 29 ஆண்டாக இருளில் மூழ்கி கிடக்கிறது.காரைக்கால் நகர் பகுதியின் மையத்தில் உள்ள ஜுபைதா நகர். இந்நகர் 1990ம் ஆண்டு உருவானது, தற்போது ஏறக்குறைய 75க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி, 300க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வசித்து வருகின்றனர். நகர் உருவாகி கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கே இன்னமும் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. அதாவது, மின்கம்பங்கள் இருந்தும், விளக்கு அமைக்க மாவட்ட மின்துறை முன்வரவில்லை. நகர் வாசிகள் பலமுறை மின்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்தும், மின்விளக்குகளை குடியிருப்புவாசிகளே வாங்கித் தருவதாக எடுத்துகூறியும் பலனில்லை.கடந்த 2018ம் ஆண்டு மாவட்ட மின்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து நகர் வாசிகள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவியதும், தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மின் துறை அதிகாரிகள் நகரை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, விரைவில் தெருவிளக்கு அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அந்த ஆய்வு நடந்து ஓராண்டாகியும் மின்விளக்கு இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் இஸ்மாயில் கூறியது:நகரின் மையத்தில் உள்ள ஓர் நகரில், போதுமான இடைவெளியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டும், தெருவிளக்கு அமைக்காதது விந்தையாக உள்ளது. ஆண்டுதோறும் மின்கட்டணத்தையும், வீட்டுவரியையும் உயர்த்தி செல்லும் அரசு, மக்களின் அடிப்படை தேவையான தெரு விளக்கை அமைப்பதில் மெத்தனம் அகட்டுவது ஏன் என்பது புதிராக உள்ளது. தெரு விளக்கு இல்லாததால் இருளில் புதர்களிலிருந்து படையெடுக்கும் விஷஜந்துகளாலும், ஓயாது விரட்டும் தெருநாய்களாலும், சமூக விரோதிகளாலும், மக்கள் தினசரி பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பலமுறை இரவில் சிறப்பு பாடம் படித்து விட்டு வீடு திரும்பும் மாணவ, மாணவியர்களும், வேலைக்கு சென்று திரும்புவர்களும் ஒவ்வொரு நாளும் மரண பயத்துடன் தெருவில் நடந்து செல்ல வேண்டி உள்ளது, வெளிச்சம் உள்ள பகுதிகளிலேயே பலவித குற்றச் சமவங்கள் நடைபெறும்போது, தெருவிளக்கே இல்லையென்றால்? சொல்லவேன்டியதில்லை. எனவே, ஜுபைதா நகரில் விரைந்து ஒளியேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.

Related Stories: