மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கும் மக்கள் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்த குறுவை நெற்பயிர்கள் பதராகும் அபாயம்

கும்பகோணம், ஜூலை 24: கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைநீர் வயல்களில் தேங்கி நிற்பதால் 1000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பதராகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாதம் இறுதியில் விதை விதைத்து ஜூன் மாதம் தொடக்கத்தில் நடவு செய்தனர். தற்போது 80 சதவீத நடவுப்பணி நடந்துள்ளது. கும்பகோணம், உத்தாணி, சுந்தரபெருமாள்கோவில், பட்டீஸ்வரம், கபிஸ்தலம், உமையாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் மின்மோட்டாரை கொண்டு குறுவை நடவு கடந்த மே மாதம் செய்திருந்தனர்.நாற்றுகள் வளர்ந்து தற்போது கதிர் விட்டு அறுவடைக்கு தயாராகும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆவூர், சுந்தரபெருமாள்கோவில், உத்தாணி அருகில் உள்ள வயல்களில் கதிர் முற்றிய பயிர்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கதிர்களில் நாற்றுகள் முளைத்து அனைத்து நெல்மணிகளும் பதராகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. நெற்கதிர்களில் ரசாயன உரங்களை தெளித்ததால் கதிர்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்தது. இதில் தற்போது ஆடி காற்று அடித்து வருவதால் கதிர்கள் சாய்ந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து குறுவை நடவு பணி செய்துள்ள விவசாயிகள், கதிர் முற்றிய வயல்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் குறுவைக்காக செலவு செய்த அனைத்து தொகையும் வீணாகிவிட்டது. சாகுபடி நன்றாக இருக்கும்போது ஒரு ஏக்கருக்கு 35 நெல் மூட்டைகள் கிடைக்கும். தற்போது ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைகள் வருவதே சிரமமாகும். அறுவடைக்கு தயாராக உள்ள நெல்மணிகள், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைநீரில் இருப்பதால் அனைத்து கதிர்களும் ஊறிவிடும். அதன்பிறகு வெயிலில் காயவைத்தாலும் நெல்மணிகள் தரமானதாக இருக்காது என்பதால் அறுவடை செய்த நெல் மூட்டைகள் போதிய விலைக்கு போகாது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.கடந்த சில நாட்களாக கும்பகோணம் கோட்ட பகுதியில் மழை பெய்துள்ள நிலையில் வயல்களில் அருகில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் காடுகள்போல் செடி, கொடிகள் முளைத்து தண்ணீர் செல்வதற்கே வழியில்லாமல் உள்ளது.எனவே வயல்களில் உள்ள தண்ணீரை வடிய விடாவிட்டால் 1,000 ஏக்கர் வரை அறுவடைக்கு தயாராக உள்ள அனைத்து குறுவை பயிரும் நாசமாகும். எனவே வாய்க்கால்களை விரைந்து தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: