கீழத்தூவல் அரசு பள்ளியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பயன்படுத்தும் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத அவலம்

சாயல்குடி, ஜூலை 23: கீழத்தூவல் அரசு மேல்நிலை பள்ளயில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் சாலையோரம் கிடக்கும் தண்ணீரை பயன்படுத்தும் அவலம் உள்ளது. முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் அரசு மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களில் சில கட்டப்பட்டு பல வருடங்களாகி விட்டதால், கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் ஓரத்தில் பெண்கள் மற்றும் ஆசிரியைகள் கழிவறை வளாகம் இருப்பதால், போதிய பாதுகாப்பின்றி உள்ளது. கழிவறையை சுற்றி கருவேல மரங்கள், கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் அருகே கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் மாணவர்கள் வெயில், மழைக்கு ஒதுங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளியில் குடிப்பதற்கு தண்ணீர் உள்ளது. ஆனால் சாப்பாடு பாத்திரங்களை கழுவுவதற்கும், கழிவறைக்கு பயன்படுத்துவதற்கு தண்ணீர் இல்லை. இதனால் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு எதிரே கண்மாய் கிடங்கில் கிடக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். கிடங்கு தண்ணீரை கிராமமக்கள் குளிப்பதற்கு, துணிகளை துவைப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சுகாதாரமற்ற தண்ணீரை மாணவர்கள் பயன்படுத்துவதால் தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. கண்மாய் கிடங்கிற்கு வரும்போது. பள்ளிக்கு எதிரே பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே பள்ளிக்கு போதிய அளவு குடிநீர், தண்ணீர் வசதி, வகுப்பறை, சுற்றுச்சுவர் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: