காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் டாஸ்மாக் மதுக்கடை

திருவள்ளூர், ஜூலை 19:திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடையை சென்னை சிறப்பு பறக்கும் படை அலுவலரும், துணை கலெக்டருமான மாலதி  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருவள்ளூர் மற்றும் காக்களூர் ஊராட்சியில் மொத்தம் 6 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தலக்காஞ்சேரி சாலை ஆகிய இடங்களில், அனுமதியின்றி, ‘’பார்கள்’’’’ இயங்கி வருகின்றன.மேலும், இரவு நேரத்தில், கூடுதல் விலைக்கு, பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் விதியை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இரவு நேரங்களில் தங்களது குடியிருப்புகளுக்கு மற்றவர்கள் துணையுடன் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்குவது குறித்து ‘’தினகரன்’’’’ நாளிதழில் இரு தினங்களுக்கு முன் படம் வெளியானது. இதையடுத்து அன்றைய தினமே, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உத்தரவின்படி, சென்னை சிறப்பு பறக்கும் படையின் துணை கலெக்டர் மாலதி, காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.அங்கு அனுமதியின்றி பார் இயங்குவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அங்குவந்த அப்பகுதி மக்கள், ‘’டாஸ்மாக் கடையால், பெண்கள், மாணவியர் செல்ல அச்சப்படுகின்றனர். சாலையை மறித்து, வாகனங்களை நிறுத்தி, மது அருந்துவதால், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர்’’’’ என முறையிட்டனர்.

இதையடுத்து, சாலையோரம் மது அருந்தியவர்களை எச்சரித்து அனுப்பினார்.  தொடர்ந்து அவர் கூறுகையில், ‘’காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடை இயங்க மாவட்ட மேலாளர் எப்படி அனுமதி வழங்கினார் என தெரியவில்லை. குடியிருப்பு பகுதியில் கடை இயங்க அனுமதி வழங்கிய டாஸ்மாக் மண்டல மேலாளர் மீதும், டாஸ்மாக் மேலாண் இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’’’’ என்றார்.

Related Stories: