தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருவள்ளூர், ஜூலை 19: தமிழகத்தில் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை ‘’சாஹர் கவாச்’’’’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை ஆறு மணிக்கு துவங்கியது.மாநிலத்தின் கடலோரப் பாதுகாப்பை சோதிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த ஒத்திகையில், கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புப் படை, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, தமிழக சட்டம் ஒழுங்கு போலீசார் உள்ளிட்ட காவல்துறையின் பிரிவுகளும், வருவாய்த்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளும் பங்கேற்றன.இந்த ஒத்திகையை ஒட்டி, திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ள தமிழகத்தின் 13 கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரியும் நபர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

நேற்று காலை ஆறு மணிக்குத் துவங்கிய இந்த ஒத்திகை, இன்று இரவு நிறைவு பெறும். கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஒத்திகையின் போது, பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில், கடல் வழியாகவோ, சாலை வழியாகவோ ஊடுருவி வரும் காவல்படையின் கமாண்டோக்கள், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினர் அவர்களைப் பிடிப்பார்கள். இது ‘’ஆப்ரேஷன் ஆம்லா’’’’ என அழைக்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு இந்த ஒத்திகைக்கு ‘’சாஹர் கவாச்’’’’  என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொன்னேரி: பழவேற்காட்டில், கடலோர மாவட்டங்களில் அன்னிய ஊடுருவலை கண்காணிக்கும் சாகர் கவாஜின், முதல்நாள் கண்காணிப்பு பணி நேற்று துவங்கியது. அதில், நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களான, 13 மாவட்டங்களில் கடற்கரை வழியாக தமிழகத்திற்குள் பரவும் தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்கும் பொருட்டு சாகர் கவாஜ் எனும் கண்காணிப்பு திட்டம் துவக்கப்பட்டு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நேற்று சாகர் கவாஜின் முதல் நாள் கண்காணிப்பு துவக்கப்பட்டது. பொன்னேரி  உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களுக்கு விழிப்புணர்வு, வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள், இந்த சாகர் கவாஜில் நடைபெற்று வருகிறது. மீனவ மக்கள் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கண்காணிப்பு பணியில் காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: