பூண்டி ஒன்றியம் தோமூரில் மக்களை அச்சுறுத்தும் விஏஓ அலுவலகம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவள்ளூர், ஜூலை 18: திருவள்ளூர் அருகே தோமூர் ஊராட்சியில், பராமரிப்பின்றி சேதமடைந்த விஏஓ அலுவலகத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில், பொது மக்கள் எளிதில் வது செல்ல வசதியாக கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. பழமையான இந்த அலுவலக கட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது.மேலும் கட்டிடத்தின் சுவர் மற்றும் தரை பகுதிகள் பெயர்ந்து அலுவலக பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வீட்டு மனை, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, நஞ்சை, புஞ்செய் நிலங்களுக்குரிய நகல் மற்றும் அத்தாட்சி போன்ற பல்வேறு ஆவணங்கள் பெற இவ் அலுவலகத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், பண்டிகை காலங்களில் அரசால் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் உள்ளிட்ட இலவச பொருட்கள் மற்றும் ஆவணங்கள், மழை காலங்களில் நனைந்து சேதமடைந்து கரையான் அரிக்கும் நிலையில் உள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகத்திற்கு வாரிசு சான்றிதழ் வாங்க வந்த ஒருவர் கூறுகையில், ‘’பொது மக்களையும், அரசு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டிய விஏஓ அலுவலகம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் அனைத்து தரப்பினரும் உயிருக்கு பயந்து ஒரு வித அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.இதுவரை தணிக்கைக்கு வந்து செல்லும் உயர் அதிகாரிகள் மற்றும் அவ்வழியே பயணிக்கும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட வருவாய்துறையினர் கண்டுகொள்ளாதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, விபரீதம் நடக்கும் முன் பாழடைந்த விஏஓ அலுவலகத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: