காலதாமதமாக வந்ததால் ஆத்திரம் அரசு பேருந்து சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி, ஜூலை 18: கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தில் தாமதமாக வந்த அரசு பேருந்தை  பொதுமக்களுடன் இணைந்து மாணவர்கள்  சிறைப்பிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம், மாநெல்லூர், பல்லவாடா, சூரப்பூண்டி, மாதர்பாக்கம் உள்ட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களில் இருந்து சென்னை மற்றும் பொன்னேரியில் உள்ள  பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகள் தொடர்பாக செல்பவர்கள், பாதிரிவேடு - பொன்னேரி தடத்தில் ஈகுவார்பாளையம் வழியாக வரும் (தடம் எண்: 112P) அரசு பேருந்தையே நம்பியுள்ளனர்.இப்பேருந்து கடந்த சில மாதங்களாக காலை, மாலை நேரங்களில் சரியான நேரத்துக்கு வராமல், மிக தாமதமாகவே வந்து செல்கின்றன. இதனால் ஏற்படும் தாமதத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும்  இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் ஈகுவார்பாளையத்துக்கு அரசு பேருந்து தாமதமாக வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி சாலையில் வந்த 2 அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடை பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும், பாதிரிவேடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ”எங்கள் பகுதிக்கு அரசு பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி, பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் படிப்பு பாதிக்கிறது. தேர்வு காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே காலை, மாலை வேளைகளில் சரியான நேரத்தில் அரசு பேருந்துகள் வந்து செல்ல அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.இதையடுத்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பாதிரிவேடு எஸ்ஐ இளங்கோவன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், ஈகுவார்பாளையத்துக்கு குறித்த நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்ஐ உறுதி கூறினார்.அவரது உறுதியை ஏற்று மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: