குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, ஜூன் 18: திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை கிராமத்தில் உள்ள புதிய காலனி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இக்கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு அடிபம்பு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதமாக நிலத்தடிநீர் மட்டம் குறைந்ததால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெருமுளை வழியாக சிறுமுளை, புதுக்குளம் கிராமங்களுக்கு பைப்லைன் மூலம் கூட்டுக் குடிநீர் செல்கிறது. இதிலிருந்து பைப்லைன் இணைக்கப்பட்டு பெருமுளை புதிய காலனி பகுதிக்கு கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு அப்பகுதியில் இயங்கும் கை பம்பு குழாய் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி கிராம மக்கள் அறிவித்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: