நாகை அக்கரைகுளம் படித்துறையில் சேதமடைந்த ஈமக்கிரியை கொட்டகை

நாகை, மே 23: நாகை அக்கரை குளம் படித்துறையில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில்  இருந்த ஈமக்கிரியை கொட்டகையை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இடித்தனர்.நாகை அக்கரை குளம் படித்துறையில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு ஈமக்கிரியை செய்வதற்கான கொட்டகை ஒன்று தனியாரால் கட்டித்தரப்பட்டது. இதையடுத்து இந்த ஈமக்கிரிகை கொட்டகையில் நாகை டவுன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் ஈமக்கிரிகை செய்து வந்தனர். இவ்வாறு பயன்படுத்தி வந்த ஈமக்கிரிகை கொட்டகையை முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டதால் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள ஈமக்கிரிகை கொட்டகையை முழுவதுமாக இடித்து தள்ளிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஒரு சில பொதுமக்கள் நாகையில் உள்ள 12 சிவாலங்களில் ஒரு சிவாலயமான மீனாட்சிஅம்பாள் உடனுறை சொக்கநாதசுவாமி கோயில் நுழைவு வாயிலில் இந்த ஈமக்கிரிகை செய்யும் கொட்டகை உள்ளது. எனவே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதால் சேதம் அடைந்த ஈமக்கிரிகை கொட்டகையை இடித்து தள்ளிவிட்டு மீண்டும் அந்த இடத்தில் ஈமக்கிரிகை கொட்டகை அமையாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதேபோல் நாகையில் புகழ் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவின் போது தீர்த்தவாரி அக்கரை குளத்தில் தான் நடைபெறும். தீர்த்தவாரி நடைபெறும் படித்துறை அருகிலேயே ஈமக்கிரிகை கொட்டகையும் அமைந்திருப்பது சரியில்லை. எனவே அதை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த பழுதடைந்த கொட்டகையை அகற்ற எந்த அரசுத்துறையும் முன்வரவில்லை. இதனால் ஒன்றுகூடிய அப்பகுதி பொதுமக்கள் அக்கரைகுளம் மேல்பகுதியில் உள்ள ஈமக்கிரிகை கொட்டகையை தாங்களாகவே நேற்று இடித்து தள்ளினர். இதை தொடர்ந்து ஈமக்கிரிகையை கொட்டகையின் கட்டிட பொருட்களை நவீன இயந்திரங்கள் உதவியுடன் அகற்றினர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாகை அக்கரைகுளம் மேல்பகுதி கரையில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் ஈமக்கிரிகை கொட்டகை தனியாரால் கட்டித்தரப்பட்டது. இந்த கொட்டகையை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஈமக்கிரிகையை செய்பவர்கள் அந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால் இந்த பொருட்கள் எல்லாம் சிதறி அங்குள்ள சிவாலயத்தின் வாசல் முன்பு கிடக்கும். இரவு நேரங்களில் இந்த இடத்தை சமூக விரோத செயல்களை செய்வதற்காகவும் பயன்படுத்தி வந்தனர். எனவே பொதுமக்கள் எல்லோரும் ஒன்று கூடி இந்த கொட்டகையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அதை அகற்ற எந்த அரசு துறையும் முன்வரவில்லை. எனவே பொதுமக்கள் எல்லோரும் ஒன்றுகூடி அந்த கொட்டகையை இடித்துதள்ளி அப்புறப்படுத்தி வருகிறோம் என்றனர்.

Related Stories: