வீரபாண்டி முல்லை பெரியாற்று தடுப்பணையின் உள்ளே 50 மீட்டர் தூரம் குளிக்க தடை உயிர்ப்பலியை தடுக்க நடவடிக்கை

தேனி, மே 22:  வீரபாண்டி முல்லை பெரியாற்றில் உள்ள தடுப்பணையில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு குளிப்பதற்கு தீயணைப்புத்துறை தடை விதித்துள்ளது. தேனி தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 75 பேர் வரை நீரில் மூழ்கி இறக்கின்றனர். போடி அணைப்பிள்ளையார் அணைப்பகுதி ஆபத்தானது என்பது தெரிந்தும் அங்கு குளிக்க சென்று பலியாகின்றனர். கடந்த வாரம் ஒரே நாளில் போடியில் ஒரு கல்குவாரி, மேகமலையில் ஒரு அணை மற்றும் கும்பக்கரையில் தலா ஒருவர் வீதம் 3 பேர் பலியாகினர்.

வீரபாண்டி முல்லையாற்றில் தடுப்பணையில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு பாறைகளும், சிறிய குறுக்கு பொந்துகளும் அதிகமாக உள்ளன.

குளிக்க செல்பவர்கள் இந்த பொந்துகளில் கால்களை சிக்க விட்டு நீரில் மூழ்கி விடுகின்றனர். சிலர் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறக்கின்றனர். எனவே இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

அந்த இடத்தில் நீர் அருவிபோல் விழுந்து செல்வதால் சமதளமாக மாற்றி பாதுகாப்பாக வைப்பது முடியாத காரியம் எனக்கூறி விட்டனர். எனவே நாங்கள் பாறைகள் உள்ள பகுதியை சுற்றி பச்சைக்கலர் வலை கட்டி வைத்துள்ளோம். இந்த இடத்தில் மட்டும் குளிக்க தடை விதித்துள்ளோம். ஆற்றின் மற்ற இடங்கள் மணற்பாங்கான பகுதிகளாக உள்ளன. எனவே அங்கு குளிப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. எனவே மற்ற இடங்களில் குளிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: