திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும்

குளித்தலை ,மே22:  திருச்சி -சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை  கரூரிலிருந்து புறப்பட வேண்டும் என குளித்தலை மக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் சென்னை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அடுத்த நிலையில் உள்ளது குளித்தலை ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குளித்தலை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் இரவு 8.50க்கு வரும் மங்களூர்- சென்னை விரைவு ரயில் தினமும் தாமதமாக வருகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மங்களூர் சென்ட்ரலில் இருந்து புறப்படும் நேரத்தினை காலை 6.45 மணி என்பதை 7.45 என மாற்றித் தர வேண்டுகிறோம்.

குளித்தலை ரயில் நிலையம் முதல் நடைமேடையில் தான் பெரும்பாலான விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றன. இந்நிலையில் இந்த முதல் நடைமேடையில் கிழக்கு பகுதியில் ஏராளமான நடைபாதகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் பயணிகள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால் முதல் நடைமேடையை சீர் செய்ய வேண்டும்.  சேலம் சந்திப்பில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கரூர், குளித்தலை வழியே புதிய ரயில் விடவேண்டும். மானாமதுரை சந்திப்பில் இருந்தும் மயிலாடுதுறை சந்திப்பில் இருந்தும் சேலத்திற்கு குளித்தலை, கரூர் வழியாக பயணிகள் விரைவு ரயில் (பாஸ்ட் பாசாஞ்சர்) விட வேண்டும். திருச்சி சந்திப்பில் இருந்து தினமும் சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் கரூர் சந்திப்பில் இருந்து விட வேண்டும். மேலும் பகல் நேரத்தில் இந்த ரயில் செல்வதால் மக்கள் பயனடையும் வகையில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: