திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

திருவள்ளூர், மார்ச் 15: திருவள்ளூர்  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வினை 167 தேர்வு மையங்களில் 46,135 மாணவ, மாணவியர்கள் எழுதினர். திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கி 29ம் தேதி வரை 167 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 21,280 மாணவர்கள், 24,855 மாணவியர்கள் என மொத்தம் 46,135 பேர் எழுதினர்.புழல் சிறைவாசிகளுக்கென மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைத்து 51 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 19 பேர், நேத்ரோதயா சிறப்பு பள்ளியில் 3 பேர் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ள தேர்வர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை வழங்கப்பட்டது.நேற்று துவங்கிய தமிழ் முதல் தாள், 18ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், 20ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகிய தேர்வுகள், பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது. மற்ற மூன்று தேர்வுகள் வழக்கம்போல காலை 10 மணிக்கு துவங்கி 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கவுண்டி மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories: