நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

திருப்போரூர், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக, திருப்போரூர் பகுதியில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.  இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் திருப்போரூர், கேளம்பாக்கம், படூர், நாவலூர், மாமல்லபுரம், கோவளம் ஆகிய பகுதிகளில், அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களில் இருந்த கொடிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்த எம்ஜிஆர் சிலை, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகிய சிலைகள் மூடப்பட்டன. பின்னர் பஸ் நிலையத்தை ஒட்டி இருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன.பஸ் நிலையத்துக்கு எதிரே இருந்த கொடி கம்பங்கள், இயந்திரம் கொண்டு அறுத்து எடுக்கப்பட்டன. இதற்கு திமுக வார்டு செயலாளர் செங்கப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதுவரை எந்த தேர்தலிலும் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதில்லை. ஆனால் இந்த தேர்தலில் மட்டும் ஏன் அகற்றுகிறீர்கள், அப்படி ஏதேனும் உத்தரவு இருந்தால் அரசியல் கட்சிகளை அழைத்து  கூட்டத்தில் சொல்ல வேண்டும். அதன்படி நாங்களே அகற்றி இருப்போம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அதற்கு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், எங்களை தடுக்க வேண்டாம். அரசு மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவை நாங்கள் செயல்படுத்துகிறோம் என கூறி அவரை சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: