நீலமங்கலம் ஊராட்சியில் அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

செய்யூர், பிப் 15: நீலமங்கலம் ஊராட்சி தொடக்க பள்ளிக்கு ₹75 ஆயிரம் மதிப்பிலான கல்விக்கு தேவையான உபகரணங்களை அவ்வூராட்சி பொது மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சீர்வரிசையாக வழங்கினர். லத்தூர் ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 104 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக செயல்படும் இப்பள்ளியை தரம் உயர்த்தும் நோக்கில், இவ்வூராட்சி பொது மக்கள் ஒன்று சேர்ந்து₹ 50 ஆயிரம் நிதி திரட்டினர். மேலும் பள்ளியில் பணியாற்றிய முன்னாள் மற்றும் தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர், ஆகியோர் இணைந்து ₹25 ஆயிரம் நிதி திரட்டினர். இந்த நிதியை கொண்டு, பள்ளிக்கு தேவையான டைல்ஸ் கற்கள், குடிநீர் தொட்டி, குடிநீர் குழாய்கள், மின் விசிறி, நாற்காலிகள், மின்சார மணி, குடிநீர் டிரம், குடங்கள், கடிகாரம் உள்பட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டன.இந்நிலையில், மேற்கண்ட பொருட்களை நேற்று காலை 10 மணியளவில் நீலமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, மேளதாளத்துடன் பொதுமக்கள் சீர்வரிசையாக கொண்டு சென்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகசுந்தரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் லத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஆசிரியர் பயிற்றுநர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் மற்றும் நல்லம்பாக்கம் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், ஊர் பொதுமக்களும் இணைந்து கல்வி சீர் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீரப்பாக்கம் பாபு, நல்லம்பாக்கம் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் லேகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அமலாபிரிஜித் ஆகியோர் கலந்து கொண்டு, கல்வி சீர் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தனர்.முன்னதாக, பள்ளிக்கான சீர் வரிசை பொருட்களை, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர்.

Related Stories: