கொடி கம்பங்களை அகற்றாமல் தேர்தல் நடத்தை விதிமுறை மீறும் அதிமுக கூட்டணி கட்சியினர் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

கும்பகோணம், மார்ச் 15: கும்பகோணம் பகுதியில் கொடிகள் மற்றும் கொடி கம்பங்களை அகற்றாமல் அதிமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி வருகின்றனர் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. கும்பகோணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிமுக கூட்டணி கட்சியினர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது என்று கடந்த 10ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது. விளம்பர பேனர், போஸ்டர், கொடி கம்பங்கள் மற்றும் கொடிகளை அகற்ற வேண்டும். அனுமதியில்லாமல் தனியார் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. சுவர்களில் அரசு விளம்பரங்களை எழுதக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கும்பகோணம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பாலங்கள், சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளது. மேலும் விளம்பர பேனர்கள், கட்சி கொடிகள், கொடி மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

மேலும் ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சி கொடிகள், கொடிமரங்கள் முற்றிலும் அகற்றப்படாமல் உள்ளது. இவர்களின் கொடி மரம் மற்றும் கொடிகள் அப்படியே இருப்பதால் அமமுகவினர் தங்களது கட்சி கொடிகளை அகற்றாமல் உள்ளனர். கும்பகோணம் நகர பகுதிகள், சுந்தர்பெருமாள்கோயில் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது. நகர பகுதிகளான கும்பேஸ்வரர் கோயில் பூங்கா, தெற்கு வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சியினரின் கொடிகள் மற்றும் அமமுகவினர் கொடிகள் அகற்றப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்தவுடன் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தநிலையில் அதிமுக கூட்டணி கட்சியினரின் கொடிகள் அகற்றாமல் இருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறிய செயலாகும் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவித்தவுடன் விதிமுறை அமலுக்கு வந்துவிட்டதால் பல்வேறு கட்சியினர் தங்களது கொடிமரம் மற்றும் கொடிகளை அகற்றிவிட்டனர்.  ஆனால் ஆளுங்கட்சியினரான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியான பாமக, தேமுதிக நிர்வாகிகளிடம் கூறினால் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுகின்றனர். இதனால் மற்ற கட்சியினர் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உடனடியாக தங்களது கொடி, கொடிகம்பங்களை அகற்றாவிட்டால் நகர பகுதிகளில் ஆணையரை கொண்டும், ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டும் அதிரடியாக அகற்றப்படும் என்றார்.

Related Stories: