கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணி செய்யாமல் சுங்கம் மட்டும் வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

கரூர், மார்ச் 15: தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு செய்யாமல் சுங்கம் மட்டும் வசூலிப்பதற்கு வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை என்எச் 7 மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்எச் 67 சாலைகள் உள்ளன. என்எச்7 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக இச்சாலை திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை செல்கிறது. மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ரிப்ளக்டர்கள் பழுதாகி ஒளிஉமிழும் வர்ணம் இல்லாமல் இருக்கிறது. இரவு நேரங்களில் வாகனங்களின் ஒளி பட்டு இது பிரதிபலிக்கும். சாலை தரையிலும் ஆங்காங்கே வளைவுகளை குறிக்கும் வகையில் பதிக்கப்பட்டிருந்தது. இவையும் உடைந்தும், ரிப்ளக்டர் இல்லாமலும் காணப்படுகிறது.

இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். சேலத்தில் இருந்து வரும் வழியில் நாமக்கல் மாவட்டம், கரூர் அருகே உள்ள கணவாய் பகுதியில் சுங்கசாவடி அமைத்து சுங்கம் வசூலிக்கின்றனர். சுங்கம் வசூலிப்பு செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை.

வீரராக்கியம் முதல் சுக்காலியூர் வரை தேசிய நெடுஞ்சாலை என்எச்67ல் நிர்வாகத்திடம் இருந்த பகுதி தற்போது மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்து பராமரித்து வருகிறது. இச்சாலையிலும் ரிப்ளக்டர்கள் காணப்படவில்லை. வேகத்தடையில் ஒளி உமிழும் வர்ணம் பூசப்படாமல் இருக்கிறது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரிப்ளக்டர்களை அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: