பொள்ளாச்சி சம்பவம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பெண் வக்கீல்கள் கோரிக்கை மனு

திருச்சி, மார்ச் 14: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காமக்கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பல தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பெண் வக்கீல்கள் ஜெயந்திராணி, சித்ரா இருவரும் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்முறைகள், மனரீதியான வன்முறை, உடல் ரீதியான துன்புறுத்தல்கள், உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை, வார்த்தைகளால், செய்கைகளால் துன்புறுத்தப்படுதல், செல்லிடப்பேசியில் ஆபாசமாக ஒலி, ஒளி படமெடுத்து மிரட்டுதல் போன்ற விதங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு குறை தீர்க்கும் அமைப்பு, குறை முறையீட்டு குழு, சிறப்பு உளவியல் நல ஆலோசனையாளர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் ரகசிய காப்பையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மனுவை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு இயக்குனருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: