நாமக்கல் அருகே போலீஸ் எனக்கூறி கடத்தப்பட்ட கணவரை மீட்கக்கோரி பெண் தர்ணா எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு

நாமக்கல், பிப்.14: நாமக்கல் அருகே, கடத்தப்பட்ட கணவரை கண்டுபிடித்து தரும்படி மனைவி மற்றும் உறவினர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.நாமக்கல் அருகே குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவருக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் இடையே, தொழில் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி, சரவணன் தனது ஊரில் உள்ள விநாயகர் கோயில் அருகே உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த 3 பேர், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வருவதாக கூறி, சரவணனை அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனால், அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் சென்று விசாரித்தனர். ஆனால், அங்கிருந்த  போலீசார் சரவணன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று, நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென எஸ்பி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கைலாசம், எஸ்ஐ அருண்ராஜ் ஆகியோர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, எஸ்பியிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். எஸ்பி அலுவலகத்தில் சாந்தி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எனது கணவர் சரவணனை தொழில் பிரச்னை காரணமாக சிலர் கடத்திச் சென்றுவிட்டனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரமத்தி போலீசில் புகார் அளித்தோம். ஆனால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் என்னை மிரட்டி, என் கணவர் காணாமல் போய் விட்டார் எனக்கூறி எழுதி வாங்கிக் கொண்டார். கடத்திச் செல்லப்பட்ட எனது கணவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டு 3 நாட்கள் ஆகிறது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: