புதியதாக கட்டப்பட்ட குடியிருப்புக்கு விதி மீறி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு பயனாளிகள் கடும் எதிர்ப்பு

ஈரோடு, பிப். 14 ஈரோட்டில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை விதிகளை மீறி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதற்கு பயனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

   ஈரோடு பெரியஅக்ரஹாரம் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையை ஒட்டி உள்ள அன்னை சத்யா நகரில் 1987ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால் இந்த வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் வீடுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தது. அவ்வப்போது வீட்டின் காங்கிரீட் பெயர்ந்து கீழே விழுந்து வந்தது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றதையடுத்து குடியிருப்பை இடித்து விட்டு புதியதாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 448 வீடுகள் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ.29 கோடியே 38 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

  இதையடுத்து மோசமான நிலையில் இருந்த வீடுகள் அனைத்தும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு செப். மாதம் முதல் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. தற்போது கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்படும் என்று குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு பயனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தாங்கள் குடியிருந்த வீடு புதியதாக கட்டிக்கொடுக்கின்ற நிலையில், குலுக்கல் முறையில் ஒதுக்கக்கூடாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி டோக்கன் முறையிலேயே வழங்க வேண்டும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர். குடிசை மாற்று வாரியம் இதற்கு சம்மதிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

 இது குறித்து அன்னை சத்யா நகர் மற்றும் ஈரோடு மாவட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் பெருமாள் கூறியதாவது: ஏற்கனவே நாங்கள் குடியிருந்த வீடு பழுதடைந்ததையடுத்து அதை இடித்துவிட்டு புதியதாக கட்டப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பயனாளியும் ரூ.80 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கு அதே எண் கொண்ட வீடு என்ற டோக்கன் முறையில் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் டோக்கன் முறைக்கு பதிலாக குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என கூறுகின்றனர். இதில் அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து குலுக்கல் முறை என்று அறிவித்திருப்பது விதிமீறல் ஆகும். இதே போல ஒப்பந்தப்படி குடியிருப்புகள் கட்டப்படவில்லை. குறிப்பாக கட்டுமானத்திற்கு ஆற்று மணல் தான் பயன்படுத்தப்படும் என்று கூறிவிட்டு கிரசர் மணல் கொண்டு கட்டி உள்ளனர். கட்டுமான தரம் இல்லாத நிலை உள்ளது. இடிக்கப்பட்ட 448 வீடுகளுக்கு பதிலாக புதியதாக 448 வீடுகள் கட்டப்படும் என்று கூறிவிட்டு கூடுதலாக 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் பயனாளிகள் யார் என்ற மர்மம் தெரியாமல் உள்ளது. எனவே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடந்துள்ளது.

 இது தொடர்பாக அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு பெருமாள் கூறினார்.

Related Stories: