தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் தட்டுப்பாடின்றி குடிநீர் கேட்டு தர்ணா பொதுமக்கள் போராட்டம்

தா.பேட்டை,  பிப்.14: தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்களும், அரசியல்  கட்சியினரும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கிட வலியுறுத்தி தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தா.பேட்டை  பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்கு சுமார் 13 ஆயிரம் மக்கள்  வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு திமுக ஆட்சி காலத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் போர்வெல் அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது போதிய அளவு  தண்ணீரு் வழங்கப்படுவதில்லை என்றும், 4, 5 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர்  வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய அளவு தண்ணீர்  வழங்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்  போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை.  இந்நிலையில் நேற்று போதிய குடிநீர் கேட்டு பொதுமக்களுடன்  இணைந்து அமமுக கட்சியினர் தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போதிய  அளவு குடிநீர் வழங்க வேண்டும்.

முசிறியிலிருந்து வரும் காவிரி நீரை  சேமித்து வழங்கிட தரைமட்ட நீர்தேக்க தொட்டி புதிதாக கட்ட வேண்டும்.  தா.பேட்டை பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கணக்கிடுவதற்காக  மீட்டர் பொருத்த வேண்டும். குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும்.  பேரூராட்சியின் அனுமதியின்றி அமைத்துள்ள காவிரி குடிநீர் குழாய் இணைப்புகளை  துண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் டிஎஸ்பி சீதாராமன், இன்ஸ்பெக்டர்  லதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து உரிய நவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் சேகரிடம் கோரிக்கை மனுவை அளித்து  விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: