ஆவணத்தில் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடக்கும் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அபாயம்

பேராவூரணி, பிப். 14: பேராவூரணி அருகே ஆவணத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் பூங்கா பூட்டியே கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் பூங்கா திறக்க உத்தரவிட்டார். இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடங்கள், வாலிபர்கள் உடற்பயிற்சி செய்யும் ஜிம் வசதி ஆகியவற்றுடன் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் துவங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடந்த ஓராண்டுக்கு முன் ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர், விளையாட்டு திடல், நிழல் தரும் மரங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய நவீன ஜிம் வசதியுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டை கடந்தும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.மேலும் கடந்தாண்டு நவம்பர் மாதம்  கஜா புயலின்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் சாய்ந்ததால் ஒருபக்க சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சூறைக்காற்றால் பூங்காவின் கூரை தூக்கி வீசப்பட்டது. ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. மேலும் இதற்கு காவலர் யாரும் இல்லாததால் அமைக்கப்பட்டிருந்த எல்இடி மின்விளக்குகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் திருட்டு போய்விட்டது.மேலும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஹைட்ராலிக் விளையாட்டு உபகரணங்கள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி பயன்பாட்டில் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் குமாரசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜாமுகமது மற்றும் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரியாஸ், இனாமுல் ஆகியோர் கூறியதாவது; பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல லட்சம் ரூபாய் செலவில்  அமைக்கப்பட்ட பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வராமலும் பராமரிப்பின்றியும் சேதமடைந்து வருகிறது.எனவே பூங்காவை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முழுநேர காவலரை நியமிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: