செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

தஞ்சை, பிப். 14: செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.தஞ்சையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வாழைப்பழம் மற்றும் பழ வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமை வகித்தார். கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் வாழைப்பழம் மற்றும் பழம் விற்பனை செய்பவர்கள், பழங்களை பாதுகாக்கும் குடோன்கள் வைத்துள்ளவர்கள், மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அதன் சங்க தலைவர்கள் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி ரசாயனம் கலந்து பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க கூடாது. ரசாயன மருந்து தெளிப்பது அல்லது கல் வைத்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதால் அதை வாங்கி சாப்பிடுவர்களின் உடல்நிலை கேடு அடைகிறது.எனவே இயற்கை முறையில் பழுத்த பழங்களை விற்பனை செய்ய வேண்டும். பழ வியாபாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவு பெற வேண்டும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழகுபாண்டியன், ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: