46 ஆண்டுகளாக தஞ்சை பகுதி மக்கள் காத்திருப்பு வீட்டுமனை கிடைத்தும் பட்டா கிடைக்கவில்லை தமிழக அரசு விரைந்து வழங்குமா?

தஞ்சை, பிப். 14: தஞ்சையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு 1972ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் 46 ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு இலவசமாக அரிசி, ரொக்க பணம், ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. அதேபோல் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்புவர்களை அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.1972ம் ஆண்டில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி செய்த காலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வோர்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 248 பேருக்கு தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே இலவசமாக 14.5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை ஒதுக்கீடு செய்து வீட்டுமனை கொடுக்கப்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த இடத்தில் வீடுகளை கட்டி கொண்டு குடியேற துவங்கினர். அவ்வாறு குடியேறியவர்கள் வீடுகளை கட்டி கொண்டு தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல தொழில்களை செய்து இன்று வரை பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த இடத்துக்கு பட்டா வழங்கவில்லை. பட்டா கேட்டு பலமு மனு கொடுத்தும், பல போராட்டம் நடத்தியும் பயனில்லை. ஆனால் இவர்கள் வசிக்கும் இடத்தை தவிர சுற்றியுள்ள மற்ற இடத்துக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்கிய தலைவருக்கு நன்றி செலுத்தும்விதமாக அந்த பகுதியில் குடியிருப்போர்கள் 4 தெருக்களை அமைத்து அதற்கு கலைஞர் நகர் என்று பெயரும் சூட்டியுள்ளனர். ஆனால் இந்த பெயரை சூட்டியதால் தான் என்னவோ இதுவரை பட்டா கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. இடங்களை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு எல்லாம் பட்டா கிடைத்துள்ள இந்த காலத்தில் வாரிசுகள் வேண்டாம் என்று ஆபரேஷன் செய்தவர்களுக்கு 46 ஆண்டுகள் கடந்தும் பட்டா கிடைக்கவில்லையென பாதிக்கப்பட்ேடார் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியில் குடியிக்கும் மகாலட்சுமி கூறியதாவது: 1972ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டால் குடியிருக்க இடம் தருவதாக கூறினர். நானும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன். அதன்படி எனது குடும்பத்தினர் வசிப்பதற்கு இடம் கொடுத்தனர். இவ்வாறு இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர் இந்திரா காந்தியின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக முதல்வராக இருந்த கருணாநிதி, தஞ்சை மருத்துவக்கல்லூரியில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இவ்வாறு 248 பேருக்கு 14.5 ஏக்கர் நிலம், 1972ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்துக்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்டி வீடுகளை கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இந்த இடத்துக்கு அருகே தஞ்சையில் உலக தமிழ் மாநாடு நடத்தியபோது புதிய பஸ்ஸ்டாண்ட் வந்தது. இதனால் இந்த ஏரியா நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. எங்களுக்கு பின்னர் இடத்தை வாங்கி வீடுகளையும், மிகப்பெரிய கட்டிடங்களையும் கட்டியுள்ளவர்களுக்கு பட்டா கிடைத்துள்ளது. எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. பலமுறை போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. இதற்கு காரணம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்த பகுதி, ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.நாங்கள் ஒன்றும் இந்த இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. அரசு தான் இடம் கொடுத்தது. அப்படியிருக்கும்போது ரயில்வே நிர்வாகத்திடம் பேசி அதற்கான வழிமுறைகளை செய்து பட்டா வழங்க வேண்டியதை அரசு தான் செய்ய வேண்டும் என்றார்.வெயிலுமுத்து என்பவர் கூறுகையில், பட்டா கேட்டு மனு செய்தால் பட்டா தர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர். காரணம் இந்த இடம் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமானது என்று வரைபடத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் தஞ்சையில் எம்பியாக இருந்த சிங்காரவேலுவை பார்த்து இந்த இடம் ரயில்வே நிர்வாகத்துக்கு தேவைப்படாது என்று எழுதி வாங்கி அதையும் சமர்ப்பித்துள்ளோம். எல்லாம் செய்தும் கலைஞர் நகருக்கு பட்டா கிடைப்பதில் இன்னும் சிக்கல் நிலவுகிறது. தேர்தல் காலத்தில் வாக்கு கேட்டு வரும் எல்லா கட்சியினரையும் சந்தித்து பட்டா வேண்டுமென கோரிக்கையை வைப்போம். அவர்களும் வெற்றி பெற்ற பின்னர் சட்டசபை, பாராளுமன்றத்தில் பேசுவர். ஆனால் 46 ஆண்டுகளை கடந்தும் பட்டா கிடைக்கவில்லை.இங்கு வசிப்பவர்கள் யாரும் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஒரு குழந்தையுடன் போதும் என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அரசு வழங்கிய இடமாகும். அப்படியிருக்கும்போது பட்டா வழங்குவதில் என்ன சிக்கல். பட்டா வழங்க தேவைப்படும் பணத்தை செலவு செய்வதாகவும் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையடைய செய்கிறது என்றார். அரசு வழங்கிய இடத்துக்கு பட்டா இல்லையா? நாங்கள் வசிக்கும் இந்த இடத்துக்கு பட்டா இல்லாததால் எந்த ஒரு கடனும் பெற முடியவில்லை. அந்த காலத்தில் குழந்தைகள் வரம் என்பது டவுளாக பார்த்து தருவது என்று கூறுவர். நாங்கள் அதையெல்லாம் பார்க்காமல் அரசின் திட்டத்துக்கேற்ப குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டோம். ஆனால் அரசே வழங்கிய இடத்துக்கு பட்டா வழங்க முடியாத நிலையில் அரசு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: