காரைக்காலில் வெறிநாய்கள் தொல்லை அதிகரிப்பு பொதுமக்கள் அச்சம்

காரைக்கால், பிப்.14: காரைக்காலில் வெறிநாய்களின் அட்டகாசம் தொடர்வதால்,மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காரைக்கால் கொத்தலம்பேட்டை பகுதியை சேர்ந்த ஹரிஸ்டன், தெனுஷ்கா ஆகிய  சிறுவர், சிறுமி  உட்பட 3 பேரையும், நேரு நகரை சேர்ந்த 4 பேரையும்  நேற்று முன்தினம் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 7 பேர் காயம் அடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.இந்நிலையில், இதுகுறித்து, சமூக ஆர்வலர் பாசித் தெரிவித்ததாவது: ஒரே நாளில் ஒரே நேரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெறி நாய் கடிக்கு சிகிச்சை பெற வந்தனர். மாவட்டம் முழுவதும் ஏராளமான வெறிநாய்கள் சுற்றித்திரிகிறது.  இதனை கட்டுப்படுத்த, பல்வேறு சமூக நல அமைப்புகள் காரைக்கால் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தபோது, காரைக்கால் நகராட்சி அண்மையில் ஏராளமான வெறி நாய்களை பிடித்தது. ஆனால் காரைக்காலில் உள்ள புளுகிராஸ் அமைப்பினர் சிலர் தலையிட்டு நாய்களை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்த வெறிநாய்களை மீண்டும் தெருவில் விட்டுவிட்டனர்.  இதனால் வெறிநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து மூர்க்கத்துடனும் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் ஆடு, மாடு மற்றும் மனிதர்களை தினசரி கடித்து குதறி  வருகிறது.வெறி நாய் உள்ளூர் மக்களை கடித்தால் அரசு மருத்துவமனையில் ஆதார் கார்டை பெற்று தடுப்பூசி போடப்படுகிறது. அதுவே வெளியூறாக இருந்தால், தடுப்பூசி மறுக்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கும் தற்போது தடுப்பூசி பற்றாகுறையாக உள்ளதாக கூறப்படுகிறது. நாய்க்கு உள்ளூர், வெளியூர் மனிதர்கள் என்ற பாகுபாடு தெரியாது. எனவே, மாவட்ட நிர்வாகம் நகராட்சி மூலம் தெருவில் திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல், புளுகிராஸ் நிர்வாகிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Related Stories: