பணம் கொடுத்தால் காரியம் கைகூடும் காவலர்களை பழிவாங்கும் புழல் சிறை உயர் அதிகாரி: வைரலாக பரவும் வாட்ஸ்அப் தகவல்

சென்னை, பிப். 14: சென்னை புழல் மத்திய சிறைச்சாலைக்குள் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்களுக்கான தனித்தனி சிறை பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஆண்களுக்கு விசாரணை மற்றும் தண்டனை என தனித்தனியே 2 செல்கள் உள்ளன. புழல் சிறையில் விசாரணை, தண்டனை என 150 பெண்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டு விசாரணை சிறையில் அடைக்கப்படும் கைதிகள் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி காவலில் அடைக்கப்படுவார்கள்.தற்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காவல் துறையை சேர்ந்த ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:புழல் 2வது சிறையின் கூடுதல் பொறுப்பை வகிக்கும் ஒரு ஜெயிலர், நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்வதுபோல் கைதிகளை கஸ்டடி எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறார். மேலும், கைதியை அழைத்து வரும் போலீசார் அதிகளவு பணம் கொடுத்தால் மட்டுமே எவ்வித பிரச்னையும் செய்யாமல் கைதியை எடுப்பார்.இல்லையென்றால் கைதிகளிடம் ஏதேனும் குறைகளை சுட்டிக்காட்டி, மருத்துவரின் குறிப்பு சரியாக புரியவில்லை என ஏதாவது காரணத்தை கூறி, காவலர்களை நீண்ட நேரம் கூடுதல் ஜெயிலர் அலைக்கழித்து வருகிறார்.ஆனால் இந்திய தண்டனை சட்டத்தின்படி மருத்துவரின் பரிந்துரைகள் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மேலும் கைதிகளுக்கு ஏதேனும் விதிமீறல்கள் நடைபெற்றிருந்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, கைதிகளிடம் ‘உனக்கு ஏதேனும் சொல்ல விருப்பம் உள்ளதா? உன்னை போலீசார் தாக்கினார்களா? எந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறாய்?’ என்ற விவரங்களை நீதிபதி கேட்டுத்தான், கைதிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.நீதிமன்ற காவல் என்பது விசாரணை காவல் துறையிடமிருந்து கைதியை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்ற நீதியின் மாண்பை, சிறைத்துறை நிர்வாகம் குழித்தோண்டி புதைக்கும் விதமாக, சிறைத்துறை அதிகாரி பல்வேறு காரணங்களை கூறி, மீண்டும் அதே விசாரணை காவல் துறையினரிடமே ஒப்படைப்பது என்பது ஒட்டு மொத்த நீதிமன்ற ஆணைகளை மீறும் செயலாகும்.எனவே, நீதியின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் சிறைத்துறை அதிகாரியின் அராஜகத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: