9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வரும் 18 முதல் வேலைநிறுத்தம்

சேலம்,பிப். 13: பிஎஸ்என்எல் ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை தனியார் பராமரிப்பிற்கு அனுமதி தந்த மத்திய அரசை கண்டித்தும், ஓய்வூதிய பங்களிப்பை முறைப்படுத்த வேண்டும், 3வது ஊதிய மாற்றத்தை  அமல்படுத்த வேண்டும், பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை உடனடியாக ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பினர் கடந்த டிசம்பரில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மத்திய அமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து, போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், கோரிக்கைகளை அமலாக்குவதில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் வரும் 18ம் தேதி முதல் 20ம் வரை வேலை நிறுத்த போராட்டம் நடத்த தேசிய தொலைதொடர்பு  ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து  தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வில்லை. இதையடுத்து வரும் 18ம்தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.  இந்த போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 1500பேர் பங்கேற்கின்றனர்,’’ என்றார்.

Related Stories: