3வது ஊதிய திட்டத்தை செயல்படுத்த கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் 15ல் குடும்பத்துடன் தர்ணா நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு

திருச்சி, பிப்.13:  பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 3வது ஊதிய திட்டத்தை செயல்படுத்த கோரி வரும் 15ம் தேதி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபடுகின்றனர். மேலும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

 இது குறித்து நேற்று பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் இணைந்து கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்கின்றோம். 4ஜி அலைக்கற்றையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 3வது ஊதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். டிசம்பர் 3ல் மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் கடன் வாங்க அனுமதி தரவேண்டும். பிஎஸ்என்எல் சொத்துக்களை அதன் பெயருக்கே மாற்ற வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தெருமுனை பிரசாரம் செய்வதும், 15ம் தேதி  குடும்பத்தோடு தர்ணா போராட்டம் நடத்துவோம் என மத்திய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகள் குறித்து தெருமுனை பிரசாரங்கள் மூலம் பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றோம் என்றனர். அலுவலர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பழனியப்பன், பாலசுப்பிரமணியன், சசிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: