அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம்

கடலூர், பிப். 13: கடலூரில் தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி இயக்கக துணை இயக்குநர் (நிர்வாகம்) தியாகராசன் தொடங்கி வைத்து பயிற்சி அளித்தார். கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.அகரமுதலித் திட்ட முன்னாள் இயக்குநர் செழியன் தலைமையேற்று, ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய விருத்தாசலம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு கேடயமும், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய பணியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி வரவேற்றார். தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜான்சிராணி, கடலூர் அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.நாகப்பட்டினம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் உதவியாளர் சுப்புராமன் நன்றி கூறினார். கடலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் சந்தானலட்சுமி, பவானி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: