மண்டபம் பகுதியில் அடைப்பு வலை மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்

மண்டபம், பிப்.13: மண்டபம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அடைப்பு வலை மீன்பிடிப்பில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மண்டபம் பகுதியில் 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 300க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பது, தாக்குதல் நடத்துவது மீனவர்களின் படகுகளை சிறைபிடிப்பது தொடர்கிறது. சிறைபிடிக்கப்பட்டதில் சில மீனவர்களை மட்டும் விடுதலை செய்யும் இலங்கை அரசு, மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை விடுவிக்காமல் உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படைக்கு அஞ்சி மண்டபம் மீனவர்கள் ஒரு சிலர் கடலுக்கு செல்வதை தவிர்த்து விட்டு கரையோரம் வலைபோட்டு மீன்பிடித்தல், கூட்டுவலை மற்றும் அடைப்பு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். மண்டபம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏராளமான மீனவர்கள் அடைப்பு வலை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் கடலில் சவுக்கு மரத்தை சதுரமாக அடைத்து அதை சுற்றி வலைகளை கட்டி வைத்து மீன்கள் செல்லும் வகையில் தயர் செய்து மீன்பிடித்து வருகின்றனர். இந்த அடைப்பு வலைகுள் செல்லும் மீன்கள் வெளியே வாரமுடியாத அளவிற்கு இதை மீனவர்கள் தயார் செய்து மீன்பிடித்து வருகின்றனர். அடைப்பு வலையில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக சுவையுடன் மற்றும் உயிருடன் இருப்பதால் அசைவ பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அடைப்பு வலை மீன்கள் கணிசமான விலைக்கு விற்பனை செய்யப்படும். இது மண்டபம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரவும் மாற்று தொழிலாகவும் உள்ளது.

Related Stories: