குற்றாலத்தில் பாலிடெக்னிக் மாணவர் மர்மச்சாவு 10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்

நெல்லை, பிப். 13:  குற்றாலத்தில் மர்மமான முறையில் இருந்த பாலிடெக்னிக் மாணவர் உடலை, 10 நாட்களுக்கு பின் நேற்று போலீசார் அடக்கம் செய்தனர்.திருப்பூர் மாவட்டம் குட்டகம், புளியம்பட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கார்த்திக்ராஜா (19). இவரும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே காதல்ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி நெல்லை மாவட்டம், குற்றாலத்திற்கு வந்தனர். இருவரும் விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், கடந்த 2ம் தேதி கார்த்திக்ராஜா மர்மமான முறையில் இறந்தார்.குற்றாலம் போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியிடம் நடந்த விசாரணையில், விடுதி மேலாளர் செய்யது ஜலாலுதீன், ஊழியர் கருப்பசாமி ஆகியோர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே கார்த்திக்ராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த 10 நாட்களாக போராடி வருகின்றனர். கார்த்திக்ராஜா சாவு குறித்து நெல்லை ஆர்டிஓ மணிஸ் நாரணவரே விசாரணை நடத்தி வருகிறார். இதில் கார்த்திக்ராஜா தந்தை ராஜ்குமார், தாய் சரசு ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது அவர்கள் ஆர்டிஓவிடம் அளித்த மனுவில், கார்த்திக் ராஜாவின் சாவில் உள்ள மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அந்தப் பெண் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கிழித்து போட்டுள்ளனர். இதன் பின்னணி என்ன என்பதை விசாரிக்க வேண்டும். போலீசார் உண்மையை விசாரிக்காமல் உடலை வாங்கும்படி எங்களை மிரட்டுகின்றனர். கார்த்திக்ராஜாவின் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை டாக்டர்கள் மற்றும் போலீசார், அறிக்கை தயாரித்து கலெக்டர், போலீஸ் உயரதிகாரி மற்றும் நெல்லை ஆர்டிஓவிடம் நேற்று காலை தாக்கல் செய்தனர். அதில் 10 நாட்களுக்கு மேலாக கார்த்திக்ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை அறையில் இருப்பதால், அங்கு தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனால் ஆர்டிஓ மணிஸ் நாரணவரே  உத்தரவின் பேரில் நேற்று கார்த்திக்ராஜாவின் உடலை பாளை. வெள்ளக்ேகாயில் சுடுகாட்டில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜெய்சன்குமார், வெள்ளக்ேகாயில் விஏஓ சண்முகவேல் மற்றும் போலீசார் முன்னிலையில்  அடக்கம் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: