ஆலந்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு: சிமென்ட் சிலாப் விழுந்து பெண் கால் முறிந்தது

ஆலந்தூர், பிப், 13: ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்த பெண் மீது, சிமென்ட் சிலாப் விழுந்து கால் முறிந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தூர் புதுத்தெருவில் நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வந்த ஆலந்தூர் நீதிமன்றம்  ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கடந்த 2011ம் ஆண்டு எம்.கே.சாலை அருகே 3 அடுக்கு கொண்ட  புதிய கட்டிடத்தில்  திறக்கப்பட்டது. இந்த நீதிமன்ற கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் தற்போது நடக்கின்றன. இதையொட்டி, 3வது தள  மொட்டைமாடியில் உள்ள  குடிநீர் தொட்டியினை பொதுப்பணித் துறை ஊழியர்கள், நேற்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தொட்டியின் ஒருபகுதி மொட்டைமாடி  தடுப்பில் உரசியது. இதனால்,   சிமென்ட சிலாப் உடைந்து கீழே விழுந்தது.

அந்த நேரத்தில் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு வந்த சிந்தாரிபேட்டையை சேர்ந்த புஷ்பா (40)  என்பவரது காலில் சிலாப் விழுந்தது, இதில் அவரது கால் முறிந்து, வலியால் புஷ்பா அலறி துடித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பரங்கிமலை போலீசார், உடனடியாக புஷ்பாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: