மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 120 பேருக்கு ₹10.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், பிப்.12: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 120 பேருக்கு ₹10,57,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 120 பேருக்கு, ₹10 லட்சத்து 57 ஆயிரத்து 320 மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.சமூக நலத்துறை மற்றும் சத்துணவுதுறை சார்பில் திருநங்கைகள் சுயதொழில் புரிய 12 பேருக்கு ₹3 லட்சம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் 100 பேருக்கு தையல்  இயந்திரம், மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில்  ₹4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கு  ₹9,600 மதிப்பில் கருவிகள், மானியத்துடன்  வங்கிகடன் 14 பேருக்கு ₹3 லட்சத்து 14 ஆயிரத்து 230 மதிப்பிலும், ஆதிதிராவிட நலதுறை சார்பில் பழங்குடினர் நல வாரிய அடையாள அட்டை 12 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.

பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், வசுமதி ஆகியோர் கொடிநாள் வசூல் தொகை ₹11.08 லட்சம் காசோலையும், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபாபு ₹1  லட்சம் காசோலையையும் கலெக்டரிடம் வழங்கினர்.மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்திரசேகர், உதவி ஆணையர் (கலால்)  அமிதுல்லா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஸ்ரீநாத், சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: