பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை - மாணவனின் தாய் கலெக்டரிடம் புகார்

திருச்சி, ஜன.22: திருச்சி பொன்மலையில் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி நிர்வாகம் கீழ்த்தரமாக நடத்துவதுடன் தற்கொலைக்கு தூண்டிவருவதாகவும் இதுகுறித்து ஆதிதிராவிடர் நலக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கலெக்டரிடம் மாணவனின் தாய் மனு கொடுத்தார்.

சென்னை தாம்பரம், சானிடோரியம், டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் கயல்விழி (36). இவர், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது மூத்த மகன் ராஜா பொன்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 7ம் வகுப்பு படிக்கிறான். பள்ளியில் செலுத்திய கட்டணத்துக்கு இதுவரை ரசீது தரவில்லை. இதுகுறித்து கேட்டதால் நிர்வாகம் மற்றும் வார்டன் ஆகியோர் என்னையும், எனது மகனையும் அடித்து ஒரு அறையில் வைத்து பூட்டிவைத்து பின்னர் விடுவித்தனர். மாற்றுச்சான்றிதழும் தரவில்லை. பள்ளியில் தேர்வு எழுதவும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும் என் மீது பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் பொய்புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டுகின்றார். மேலும் எனது மகனை விடுதி வார்டன் கீழ்த்தரமாக பேசி தற்கொலைக்கு தூண்டியுள்ளாார்.  என் மனுவை ஆதிதிராவிடர் நலக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து கயல்விழி கூறுகையில், ‘நான் சென்னையில் வசித்தாலும் எங்கள் பூர்வீகம் பொன்மலை தான். எனது கணவர் இறந்துவிட்டதால் திருச்சியிலேயே வந்து செட்டிலாகிவிட எண்ணி மூத்த மகன் ராஜாவை பொன்மலை ஸ்கூலிலும், 2வது மகன் சுரக்ஷனை மற்றொரு பள்ளியிலும் சேர்த்துவிட்டேன். இருவரும் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் மூத்த மகன் ராஜா படிக்கும் பள்ளி விடுதி வார்டன் ரூ.15,000 பணத்தை தொலைத்துவிட்டார். அதை பள்ளி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் என்பதால், விடுதி மாணவர்களிடம் வசூலித்துள்ளார். பள்ளி கட்டணம் செலுத்தாததை சுட்டிக்காட்டி எனது மகனை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டி வருகிறார். இதை தட்டிக்கேட்டதால் பழிவாங்கும் நோக்கோடு பள்ளி நிர்வாகம் செயல்படுகிறது’ என்றார்.

Related Stories: