மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு குளிரால் பள்ளி மாணவர்கள் அவதி

ஊட்டி, ஜன. 22: ஊட்டியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், பல பள்ளிகளில் மாலை 5 மணிக்கு மேல் ‘ஸ்பெஷல் கிளாஸ்’ வைப்பதால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் உள்ள சில தனியார், அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை 6 மணி வரை வரையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன. இந்த சிறப்பு வகுப்புக்களை முடித்து விட்டு தொலை தூரங்களில் வசிக்கும் மாணவிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் போதிய பஸ் வசதிகள் இல்லாத நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், குறித்த நேரத்திற்குள் மாணவிகள் வீட்டிற்கு வரவில்லை எனில் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது ஊட்டியில் கடும் பனி பொழிவு காணப்படுகிறது. நாள் தோறும் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசிற்கு குறைவாகவே பதிவாகிறது. இதனால், மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. சில இடங்களில் வெயில் அடித்தாலும் கூட வகுப்பறைகளில் ஏசி.,யில் உள்ளது போல் குளிர் நிலகிறது. இதில், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் தற்போது மாலை 6 மணி வரை மாணவர்களை அமர்த்தி விடுகின்றனர். சில பள்ளிகளில் இரவு 7 மணி வரையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சிறப்பு வகுப்புக்களை முடித்து விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் கடும் குளிரில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மாணவிகளே அதிகம் பாதிக்கின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் ஸ்கார்ட் எனப்படும், குட்டைபாவாடையே சீருடையாக உள்ளதால், அவர்கள் குளிர் தாங்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பனி முடியும் வரை ஊட்டியில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: