முன்னறிவிப்பின்றிகிராமப்புற அரசு டவுன் பஸ்கள் நிறுத்தம் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் தவிப்பு

செம்பட்டி, ஜன. 22: முன்னறிவிப்பின்றி கிராமப்புற அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். கன்னிவாடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கூலித்தொழிலாளர்களின் போக்குவரத்திற்கு அரசு பஸ் சேவையை நம்பியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், சில நாட்களாக முன்னறிவிப்பின்றி அடிக்கடி டிரிப் கட் செய்யப்படுகின்றன. இப்பிரச்னையால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியினர் கூறுகையில், கசவனம்பட்டி, குட்டத்துப்பட்டி, திப்பம்பட்டி, போத்திநாயக்கன்பட்டி, கொட்டாரபட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி தடங்களில் போதிய பஸ் வசதி இல்லை. குறித்த நேரங்களில் மட்டுமே செல்லக்கூடிய அரசு பஸ்களும் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுகின்றன.

அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க முயன்றபோதும், மொபைல் அழைப்புகளை தவிர்க்கின்றனர். பதிலளிப்பதில்லை. காலை பள்ளி செல்வதிலும், மாலையில் வீடு திரும்புவதிலும் சிரமம் தொடர்கிறது. கூலித்தொழிலாளர்கள், இரவு நேர பஸ் வசதியுமின்றி தவிக்கும் அவலம் உள்ளது என்றனர்.

அரசு பஸ் ஊழியர்கள் சிலர் கூறுகையில், மாரம்பாடி, பழநிக்கான சிறப்பு இயக்கத்திற்காக, டவுன் பஸ்களை அனுப்புகின்றனர். ஊழியர்கள் தட்டுப்பாடு, அதிகாரிகளுக்கான இன்சென்டிவ் கட் பிரச்னைகளால், பல இரவுநேர அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் முயற்சித்தால், இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றனர்.

Related Stories: