அரசு பள்ளிகளை தரம் உயர்த்த 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் பள்ளி கல்வி துறை

கூடுவாஞ்சேரி, ஜன. 22: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கீரப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 270க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் ஆதிதிராவிடர் மற்றும் இருளர் குடும்பத்தை சேர்ந்த குடும்பங்களின் குழந்தைகள் அதிக அளவில் பயிலுகின்றனர்.  மேலும் இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு தொடர வேண்டும் என்றால் 15 கி.மீ.தூரம் உள்ள தாம்பரம், கூடுவாஞ்சேரி,  ஊரப்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று படிக்கவேண்டிய அவலநிலை உள்ளது.

மேலும் உயர்நிலை பள்ளி வசதி இல்லாததால் பலர் 8ம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கல்லுடைக்கும் தொழிலுக்கு அனுப்புகின்றனர். பள்ளி மேற்படிப்பு தொடர முடியாமல் மாணவர்கள் இடை விலகளுக்கு ஆளாகி வருகின்றனர்.  மேலும் உயர்நிலை பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், விளையாட்டு திடல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்து தருவதற்காகவும் 5 ஏக்கர் நிலமும் ஊராட்சி சார்பில் இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.  மேற்படி பள்ளியை தரம் உயர்த்துவதற்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி ஒரு லட்சம் ரூபாயை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி லோண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் 5 முறை கருத்துக்கள் அனுப்பியும் மேற்படி பள்ளியை இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. இதேபோல் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயரத்தகோரி கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி அரசு கருவூலத்தில் ரூ.2லட்சம் பணத்தை கட்டியுள்ளனர். ஆனாலும் இதுவரை மேற்படி பள்ளியை தரம் உயர்த்தப்படவில்லை. அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2லட்சம் வரை பணம் செலுத்தி 5ஆண்டுகள் ஆகியும் பள்ளி கல்வி இயக்குநர் நிர்வாகம் இழுத்தடிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் இடை விலகளுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  எனவே மாணவர்களின் நலன் கருதி மேற்படி பள்ளிகளின் தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: