இறால் விலை குறைவால் வருவாயில் பாதிப்பு ஏற்றுமதியாளரின் கட்டுப்பாட்டில் மீன்பிடி தொழில்: மீனவர்கள் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம், டிச. 11: இறால் மீன் விலை குறைவால் மீனவர்களின் வருவாய் குறைந்தது. ஏற்றுமதியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் மீன்பிடி தொழில் சென்று விட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்தொழில் செய்து வரும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் பிரச்னைகளுக்கு இடையில் படகில் சென்று மீன்பிடித்து திரும்புகின்றனர். இவர்களால் பிடித்து வரப்படும் இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் போதிய வருவாய் இன்றி தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடலுக்கு சென்று திரும்பும் விசைப்படகு மீனவர்களுக்கு இறால் மீன்பாடு ஓரளவிற்கு உள்ளது. பிடித்து வரப்படும் இறால்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வரவுக்கும் செலவுக்கும் சரியாக உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.750க்கு விலைபோன ஒரு கிலோ இறால் மீன் தற்போது ரூ.120 குறைந்து ரூ.630க்கு வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்படுகிறது. டீசல் விலை அதிகரித்தபோது இருந்த இறால் விலைக்கும், டீசல் விலை குறைந்ததால் தற்போது நிலவும் இறால் விலைக்கும் ரூ.120க்கு மேல் வித்தியாசம் உள்ளது.

டீசல் விலை கூடும் போது மீனவர்கள் படகுகளுக்கு தேவையான டீசல் போட்டு கடலுக்கு சென்று மீன்பிடித்து திரும்புவதற்காக இறால் மீன் விலையை கூட்டுவதும், டீசல் விலை குறைந்து விட்டால் இறால் மீன்களின் விலையை குறைப்பதுமாக ஏற்றுமதியாளர்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால் ஏற்றுமதியாளர்கள் இறால் மீன்களை வாங்குவதற்காகவே படகுகளை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடரும் இந்நிலையினால் தங்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை என்று மீனவர்கள் குமுறுகின்றனர். மொத்தத்தில் ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடித்தொழில் செய்யும் மீனவர்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: