20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தில் 186 விஏஓ.,க்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு, டிச. 11:  20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 186 விஏஓ.,க்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டில் விஏஓ., க்கள் அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த விஏஓ.,க்கள் நேற்று தங்களது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 286 விஏஓ.,க்களில் 186 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் விஏஓ.,க்கள் தங்கள் அலுவலகத்தினை பூட்டி விட்டு சாவியை வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். விஏஓ.,க்கள் போராட்டத்தின் கோரிக்கைகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நசியனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கினர். இதேபோல் இன்று (11ம் தேதி) பவானி காலிங்கராயன் பாளையத்திலும், நாளை (12ம் தேதி) ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டிலும் நோட்டீஸ் வழங்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: