20 அம்ச கோரிக்கை நிறைவேற்ற விஏஓக்கள் ஸ்டிரைக் தொடங்கியது

திருவள்ளூர், டிச. 11: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், கழிப்பிடம், கட்டமைப்பு வசதி, கூடுதல் கிராமத்துக்கு பொறுப்பு ஊதியம் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் ஆன்லைன் சேவை பரிந்துரையை நிறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த, 5ம் தேதி தாலுகா அலுவலகங்கள் முன்பு, இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 7ம் தேதி ஒருநாள் விடுப்பு எடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த பூண்டி குறுவட்டத்தில் நேற்று விஏஓக்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், பூந்தமல்லி வட்டம் திருமழிசை குறுவட்டத்தில் வட்டார தலைவர் ஏ.மகேஷ்குமார் தலைமையில் விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் திருமால் கூறுகையில், ‘’நேற்று முதல் 12ம் தேதி வரை குறுவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். இரண்டாம் கட்டமாக, 13, 14ல் தாலுகா அலுவலகம் முன் போராட்டமும், மூன்றாம் கட்டமாக, 17, 18ல் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமும் நடத்த உள்ளோம் என்றனர். திருத்தணி: திருத்தணி தாலுகா, கனகம்மா சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம், வட்ட தலைவர் மிதும்குப்தா தலைமையில் நேற்று நடந்தது.  இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் அருணாச்சலம், யாசர் அராபத், பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: