தேனி, டிச.7: தேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்கள் நாளை நடக்க உள்ளது. தேனி மாவட்ட வழங்கல் துறை சார்பில் தேனி மாவட்டத்தில் நாளை(8ம் தேதி) அனைத்து தாலுகாக்களிலும் உணவு பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஆண்டிபட்டி தாலுகாவிற்கான கூட்டம் சிறப்பாறையிலும், போடி தாலுகாவிற்கான கூட்டம் பெருமாள்கவுண்டன்பட்டியிலும், பெரியகுளம் தாலுகாவிற்கான கூட்டம் குள்ளப்புரத்திலும், தேனி தாலுகாவிற்கான கூட்டம் தர்மாபுரியிலும், உத்தமபாளையம் தாலுகாவிற்கான கூட்டம் பொட்டிபுரத்திலும் நடக்க உள்ளது.