பட்டப்பகலில் ரயில்வே ஊழியர் வீட்டில் நுழைந்து கத்திமுனையில் பெண்ணிடம் 10 சவரன் துணிகர கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர், டிச.7: பட்டப்பகலில் ரயில்வே ஊழியர் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், தனியாக இருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகையை பறித்து சென்றனர். தாம்பரம் அருகே முடிச்சூர் அடுத்த ராயப்பா நகர் வெங்கட்ரமணன் ஐஏஎஸ் சாலையில் வசிப்பவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிரஞ்சீவி ராவ் (55). ரயில்வே ஊழியர். இவரது மனைவி ஜெயகுமாரி (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிரஞ்சீவி ராவ், மேற்கண்ட பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறினார். மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி ஆந்திராவில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டின் அருகில் வேறு எந்த வீடுகளும் இல்லாமல், தனி கட்டிடமாக உள்ளது.நேற்று காலை சிரஞ்சீவி ராவ், வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஜெயகுமாரி வீட்டில் தனியாக இருந்தார். சுமார் 11 மணியளவில் 2 வாலிபர்கள், அங்கு சென்றனர். ஜெயகுமாரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர் உள்ளே சென்றபோது,

பின் தொடர்ந்த மர்மநபர்கள், கதவை மூடினர். அதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டார். உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜெயகுமாரியின் கழுத்தில் வைத்து மிரட்டி, 10 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இதையடுத்து கணவருக்கு செல்போன் மூலம், தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து மனைவியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசில், சிரஞ்சீவி ராவ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், ராயப்பா நகர் நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கதறிய அழுத கொள்ளையர்கள்

வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், கதவை மூடியவுடன், நாங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறோம். உங்களிடம் உள்ள பணம், நகையை கொடுத்து எங்களுக்கு உதவுங்கள் என கேட்டு கதறி அழுதுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, கத்தியை கழுத்தில் வைத்து நகையை பறித்தனர். ஆனால், பீரோல் இருந்த நகை, பணத்தை எடுக்கவில்லை. ஜெயகுமாரி கழுத்தில் இருந்த நகை மட்டும் போதும் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

Related Stories: