தையூர் ஊராட்சியில் குப்பை தொட்டியான மழைநீர் கால்வாய்

திருப்போரூர், நவ.15:  திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தையூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து வெள்ள நீர் வெளியேறுவதற்காக பாசன வாய்க்கால் காட்டேரி கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. தையூர், சாத்தங்குப்பம், கேளம்பாக்கம் கிராமங்கள் ஏராளமான குடியிருப்புகள், வீட்டு மனைகள் உருவாகி மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் பாசன வாய்க்கால் அளவு குறுகியதோடு அவற்றில் ஆக்கிரமிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் தையூர் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சிகளில் முறையாக குப்பைகள் அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படாததால் வீடுகளில் இருந்து இந்த கால்வாயில் குப்பை கொட்டப்பட்டு மழை நீர் வடிகால்வாய் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டு விட்டது. இதனால் ஒரு நாள் மழை பெய்தாலே தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கி நிற்கிறது.  குறிப்பாக கடலேரி வடிகால்வாயை ஒட்டி அமைந்துள்ள லட்சுமி அவென்யூ, நகர், கனக பரமேஸ்வரன் நகர், கணபதி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சாலைகளில் புகுந்து விடுகிறது.

மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இவற்றோடு கலந்து தொற்று நோயை உருவாக்குகிறது. தையூர் மார்க்கெட் சாலையில் லட்சுமி அவென்யூ சாலையின் சந்திப்பில் கடலேரி கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் இரு பக்க வீடுகளின் வளர்ச்சி காரணமாக உயரம் குறைந்து சாலையோடு புதைந்து காணப்படுகிறது. ஆகவே, இந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு வெள்ள நீர் வெளியேறும் வகையில் உயரமாகவும், ஆழப்படுத்தியும் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பகுதியின் மக்கள் தொகை வளர்ச்சியை கருத்தில் கொண்டு தையூர் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தரம் பிரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இணைந்து செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  

Related Stories: